பூண்டின் எண்ணற்ற நன்மைகள்

சமையலில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.

அதிலும் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் உண்டு.பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது.பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த Antibiotic ஆக செயல்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

பூண்டு சாப்பிடுவதால் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்து, இதய நோய் வருவது தடுக்கப்படும்.

நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளைப் போக்கும் சக்தியும் பூண்டுக்கு உள்ளது.

பூண்டை பச்சையாக சாப்பிட முடியாதவர்கள் அதை சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது ஃபார்மசிகளில் கிடைக்கும் பூண்டு மாத்திரைகளை (garlic pills) உட்கொள்ளலாம்

கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகள்.

ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் எடையைக் குறைக்க கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ உட்கொள்ளலாம்.

கறிவேப்பிலை செரிமான பிரச்சினைகளைப் போக்கும். செரிமான பிரச்சினைகளால்தான் உணவில் உள்ள கொழுப்பு அப்படியே வயிற்றில் படிந்து, உடல் எடையை அதிகரிக்கிறது.

காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சிறிது உட்கொள்வதால் வாருங்கள் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை குறைய வகை செய்கிறது.பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது.

எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்களுக்கும் இது நல்லது. பொதுவாக கறிவேப்பிலை உடலை சுத்தம் செய்து, உடலில் உள்ள நச்சுமிக்க பொருட்களை வெளியேற்றும். அதனால்தான் நம் சமையலில் கறிவேப்பில்லை அதிகமாக சேர்க்கப்படுகிறது.

ஆனால் கறிவேப்பிலையை நாம் சாப்பாட்டிலிருந்து தூக்கி எறிந்து விடுகிறோம். கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவுவதுடன், சாப்பிட்டால் தலைமுடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.

அதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து தண்ணீரோடு ஜூஸ் செய்து தேன் சேர்த்து குடித்து வரலாம்.

மருத்துவ குணங்கள் நிறைந்த மாம்பூ!

முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன.

பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன.மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.

தொண்டை வலி குணமடையும்
தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்
உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும்.

மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.

நீரிழிவு நோய்க்கு
மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும்.தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்

சீதபேதிக்கு அருமருந்து
மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.

மூலநோய் குணமடையும்
மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்

கொசுத்தொல்லை நீங்க
உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்.

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் 5 உணவுகள்

நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு சரியான டயட் மிகவும் அத்தியாவசியமானது. அதிலும் இன்றைய பரபரப்பான காலத்தில் பலரும் இரத்த கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உணவுகள் தான். உண்ணும் உணவுகள் சரியானதாக இருந்தால், எந்த ஒரு நோயும் உடலைத் தாக்காது.

ஆனால் எங்கும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த ஜங்க் உணவுகளைக் கொண்ட சூழலில் வாழ்வதால், நம்மை அறியாமலேயே நாம் கொழுப்புக்கள் அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நேரிடுகிறது. இதனால் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து, இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இருந்தாலும் மனக்கட்டுப்பாடு மற்றும் போதிய உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளைக் குறைக்கலாம். அதுவும் உணவுகளைக் கொண்டே கொலஸ்ட்ராலைக் குறைக்க முடியும்.

இங்கு நம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் டாப் 5 உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உணவில் சேர்த்து உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்.

ஆலிவ் ஆயில்

ஒருவர் தங்கள் உணவில் ஆலிவ் ஆயிலை சேர்த்து வந்தால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலவைகள், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறையும். எனவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், சமையலில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி, உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நட்ஸ்

நட்ஸ்களான வால்நட்ஸ், பாதாம் போன்றவை இதய நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். ஏனெனில் இவைகளில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்துவிடும். ஆனால் இந்த நட்ஸ்களை உப்பு சேர்க்காமல் சாப்பிடுவது தான் நல்லது.

மீன்

மீன்களை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இரத்தம் உறையும் வாய்ப்பைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

ஓட்ஸ்

ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மேலும் இது இரத்த ஓட்டத்தில் கொலஸ்ட்ரால் உறிஞ்சுவதையும் குறைக்கும். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், ஓட்ஸை அன்றாடம் உட்கொண்டு வருவது நல்லது.

பூண்டு

தினமும் 2 பல் பூண்டை பச்சையாக காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள்.

ஆரோக்கியம் தரும் அருகம் புல்

‘ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ்ந்து வாழையடி வாழையென பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’என புதுமண தம்பதிகளை பெரியவர்கள் வாழ்த்துவர். அருகு வேர் பாதாளம் வரை பாய்ந்து உயிரை தன்னுள் அடக்கி சாகா மூலிகையாக திகழ்வதை அறியலாம். தம்பதிகள் இருவரும் ஒருவருள் ஒருவரென கணவர் உயிரை மனைவியும் மனைவி உயிரை கணவனும் உள் அடக்கி வாழ்வது என்பது இதன் பொருளாகும்.

மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்ணாமலேயே உடல் நோய் நீக்கும் ஓர் உயிர் மூலிகையாகும்.‘வினாயகனைத் தொழவும் அருகைத்தேடு, அழுவதை யொழிக்கவும் அருகைத்தேடு, காலை கல்லும், மாலை புல்லும் ஆளை வெல்லும்; காலை புல்லும்,மாலை கல்லும் ஆளைக்கொல்லும்’ என்பது பழமொழி. அதாவது, அதிகாலை எழுந்து மலை ஏறுவதும், மாலையில் புல்லில் படுப்பதும் உடற்பயிற்சி பெறுவதுடன் ஆரோக்கியம் தரும்.

காலையில் புல்லில் படுத்து மாலையில் மலை ஏறுவது உடல் நலம் கெடுவதோடு, உயிரை அழிக்க ஏதுவாகும். அருகம் புல்லை சுத்தம் செய்து அதன் சாற்றை குடித்துவர நமக்கு பித்தம் மற்றும் வாத நோய்கள் எதுவும் அணுகாது.

அருகம் வேரை கணு நீக்கி புன்னைக்காயளவு அரைத்து கால் லிட்டர் பசும்பாலில் கலந்து தினசரி காலையில் தொடர்ந்து ஒரு மண்டலம்(48நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நரை நீங்கி இளமை திரும்பும். உடல் இறுகி வலிமை பெறும். அருகன் கிழங்கை காய வைத்து இடித்து பொடியாக்கி, சம எடை சர்க்கரை கலந்து காலை மாலை இரு வேளை 150 மில்லி கிராம் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறும்.

அருகம் புல் கொழுந்தை சுத்தம் செய்து அரைத்து 5 கிராம் அளவு காலையில் அருந்த வாத, பித்த கபநோய்கள் தீரும். அருகம் புல் ஒரு பிடி சுத்தம் செய்து நன்கு அரைத்து காலையில் குளிர்ந்த நீரில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் நாட்பட்ட பேதி நிற்கும்.

அருகம் புல் வேர் முதல் நுனிவரை ஒரு பிடி எடுத்து சுத்தம் செய்து அரைத்து தேவையான அளவு தண்ணீரில் கலந்து ஐந்து நட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் சூதக பேதி, பிரசவத்திற்கு முன், பின் ஏற்படும் பேதி, நாட்பட்ட பேதியும் நிற்கும். உஷ்ணங்கள் தணியும். பித்த நோய்கள் தீரும்.

வைத்தியர் கே.பி.அருச்சுனன், மாநில தலைவர் தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கம்

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் மாதுளம் பழம்

மாதுளை ஜுஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மாதுளை ஜுஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல…. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கடுமையான சீதபேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு… இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம்பழச்சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.

கல்கண்டு, பன்னீர், தேன், மாதுளம்பழச்சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, கலந்து, உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமத்தை விட்டே விலகும்.

மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால், சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.

வெற்றிலையின் மருத்துவ குணநலன்கள்

வெற்றிலை மூன்று ரகத்தில் பயிர் செய்யப்படுகிறது. இந்த மூன்று ரகத்தையும் தனித்தனியே பார்க்கும் போது இதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். கருப்பு நிறம் இல்லாத தளிர் நிறம் உள்ள வெற்றிலைக்கு வெள்ளை வெற்றிலை என்று பெயர்.இது மணமாக இருக்கும். கருப்பு நிறத்தில் உள்ள வெற்றிலைக்கு கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை என்று பெயர். கற்பூர மணம் உள்ள வெற்றிலை தாமரை இலை போன்று பெரியதாகவும் நல்ல நிறத்தோடும் இருக்கும்.இதற்கு கற்பூர வெற்றிலை என்று பெயர். இந்த மூன்று விதமான வெற்றிலைகளும் சுவையில் விறுவிறுப்பு பொருந்திய கார்ப்புத்தன்மை உடையதாகும்.

கம்மாறு வெற்றிலைச் சாறை தினமும் காலை உணவிற்கு பிறகு அரை ‘அவுன்ஸ்’ வீதம் மூன்று நாள் குடித்து வந்தால் வாத, பித்த கபத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை குறைக்கும். உடலில் நீர் ஏற்றம், தலையில் நீர் ஏற்றம், தலை பாரம் உணவு செரியாமை,மந்தம், குரல் கம்மல் வயிற்றுவலி, வயிற்று உப்புசம் ஆகியவை நீங்கும். இந்த வெற்றிலையை பாக்கும் சுண்ணாம்பும் சேர்த்து உபயோகிக்கும் போது தாம்பூலம் என்கிறோம்.

இந்த தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும். அப்படி நீக்காமல் உண்பதால் வெற்றிலையின் மருத்துவ குணம் கிடைக்காமல் போகும். இப்படி உண்பவர்களிடம் லட்சுமி சேரமாட்டாள் என்று ஒரு பழ மொழியும் உள்ளது.

அது மட்டுமல்லாமல் வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது.ஏன் என்றால் பாக்கு துவர்ப்புத் தன்மை உடையது. இத்தன்மையால் உமிழ்நீர் சுரக்காது. எனவே ஒரு வெற்றிலையை மென்ற பிறகே பாக்கு வெற்றிலையை மெல்ல வேண்டும். இப்படி செய்வதால் துவர்த்தல், சொக்குதல், மூர்ச்சையாதல், பிசுபிசுத்தன்மை முதலியன ஏற்படாமல் இருக்கும்.

அப்படி இல்லாமல் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு,இவைகளை ஒன்றாக மெல்லும் போது அதில் நின்று ஊறிய முதல் நீர் நஞ்சாகவும், இரண்டாவது நீர் மிகு பைத்தியம் தருபவையாகவும், மூன்றாவது நீர் அமிர்தமாகவும், நான்காவது நீர் அதி இனிப்பாகவும்,ஐந்து மற்றும் ஆறாவது நீர்கள் பித்தத்தோடும், அக்கினி மந்தம், ஆகியவற்றை உண்டாக்கும் என்பதால் தான் வெற்றிலைப் பாக்கை உண்ணும் போது முதல் மற்றும் இரண்டாவது நீர்களை துப்பி விட வேண்டும். மூன்றாவது மற்றும் நான்காவது நீர்களை விழுங்கிவிட வேண்டும். ஐந்தவது நீர் சுரக்கும் முன்பு வெற்றிலையை துப்பி விட வேண்டும். இதுவே தாம்பூலம் உண்ணும் முறையாகும்.

காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் மலக்குற்றம் நீங்கி இரண்டு முதல் நான்கு முறை பேதியாகும். எனவே மந்தம் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் பாக்கை அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். மதியம் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நல்ல பசி உண்டாகும்.

பசி இல்லாதவர்கள் மதிய உணவுக்கு பின்பு இவ்விதமாக உண்டால் ஆரோக்கியமான பசி உண்டாகும். மாலையில் வெற்றிலை அதிகமாகவும் பாக்கு, சுண்ணாம்பு, குறைவாகவும் மெல்வதால் வாயிலுள்ள ரணங்கள் குணமாகும். வயிற்று ரணத்தால் வாயில் வீசும் துர்வாடை நீங்கி நல்ல மணம் வீசும். இப்படி நோய்க்கேற்றவாறு வெற்றிலை, பாக்குகளை கூட்டிக்குறைக்கும் போது பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.வெற்றிலையை இளம் சூட்டில் வதக்கி சாறு எடுத்து அச்சாற்றை மூக்கில் இரண்டு துளி விட தலை நோய், தலைபாரம், தலையில் நீர்தேக்கம் ஆகியவை நீங்கும்.

இரண்டு வெற்றிலையுடன் 50 கிராம் ஊற வைத்த சிவப்பு அரிசியை சேர்த்து உண்டால் கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். சிறுவர்களுக்கு மலக்குற்றம் நீங்கும். அதோடு இருமல், மூச்சுதிணறல், கோழைக்கட்டு ஆகியவை நீங்குவதோடு இதை பெண்கள் உண்டால் ஆண்கள் மீது பற்றும் ஆண்கள் உண்டால் பெண்களின் மீது பற்றும் உண்டாகும்.

சித்தவைத்தியர் பி.அருச்சுனன், வேலூர்.

சுண்டைக்காயின் மருத்துவக் குணங்கள்

சுண்டைக்காய் உருவத்தில் சிறியதுதான். ஆனால் அதில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் பெரியது. இதன் இலேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது என்றபோதும், மருத்துவக் குணங்கள் சுண்டைக்காயின் சிறப்பாகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

சுண்டைக்காயை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும். உடல்சோர்வு நீங்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக்கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காய் மட்டுமல்ல, அதன் இலைகள், வேர், கனி என முழுத் தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவை தடுக்கக்கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் செரிமானத் தன்மையை சிறப்பாக்கும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச் சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகின்றன. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். அது மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.

முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கிச் சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள கசடுகளை நீக்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டுவந்தால் நீரிழிவு நோயால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடல்சோர்வு, வயிற்றுப் பொருமல் போன்றவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் தயாரித்து அருந்தி வந்தால் ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.

காலையில் பூண்டு பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காலையில் பூண்டு பாலை குடித்து வந்தால், சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம். முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவலாம் அல்லது அந்த பூண்டு பாலை குடித்தும் வரலாம்.

பாலில் பூண்டை வேகவைத்து பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வுத் தொல்லை மற்றும் கால்வலி போன்ற பிரச்சனைகளுக்கு பூண்டு பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை பூண்டு பால் குணமாக்குகிறது.

மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக பூண்டு பால் செயல்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

நுரையீரல் அழற்சி உள்ளவர்கள், பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், நுரையீரல் அழற்சி பிரச்சனை விரைவில் குணமாகும்.

செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடையச் செய்ய பூண்டு பால் உதவுகிறது. அதுவே வெறும் வயிற்றில் குடித்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

புறஊதா கதிர்களால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு

சூரியன் மட்டுமல்ல, மெர்க்குரி ஆவி விளக்குகள், ஹாலோஜன் விளக்குகள், உயர்தீவிர வெளியீடு விளக்குகள், ப்ளோரசன்ட் விளக்குகள், திரையரங்கில் புரொஜக்டர்கள், தேடல் விளக்குகள் மற்றும் குறிப்பிட்ட வகைகளிலான லேசர்கள் ஆகியவையும் புறஊதா கதிர்களை வெளியிடுகின்றன. இதுபோன்ற விளக்கு வெளிச்சத்தில் நீண்ட நேரம் இருப்பது கண்பாதிப்பை உண்டாக்கும்.

விளக்குகளால் மட்டுமல்ல இன்னும் பிற ஒளியினாலும் மனிதனின் கண்கள் பாதிக்கப்படுகின்றன. இதில் முக்கிய பங்கு புறஊதா கதிர்களுக்கு உண்டு. நமது உடலை பாதிக்கிற புறஊதா கதிர்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால் அவை கண்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது, கோடை காலம் தொடங்கியிருக்கின்ற நிலையில், புறஊதா கதிர்வீச்சின் அளவு குறியீடு தொடர்ந்து நிலையாக அதிகரித்து வருகிறது. இது ஆபத்தை விளைவிக்க கூடும். குறிப்பாக, பகல் வேளையில் அளவுக்கு அதிகமாக புறஊதா கதிர்கள் உடலில் படும்படி வெளியே சுற்றித்திரிந்தால், கடுமையான கண் பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையின்படி, கடந்த 2 வாரங்களில் கதிர்வீச்சு அளவானது, புறஊதா கதிர் குறியீட்டு எண்ணில் 11 என்ற உயர் ஆபத்து வகையினத்தின் கீழ் இருந்திருப்பது தெரிய வருகிறது. பொதுவாக, புற ஊதாக்கதிர்கள் நமது உடலில் படுவது குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கும்வரை, நலம் பயப்பதாக இருக்கிறது. அளவுக்கு அதிகமான புறஊதா கதிர்வீச்சுக்கு ஆட்படுவது, கண் பிரச்சினையை விளைவிக்கக்கூடும்.

குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 3 மணியிலிருந்து 4 மணி வரையும் புறஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அது ஏற்படுத்தும் பாதிப்பானது மிக மிகத் தீவிரமாக இருக்கும். உலக சுகாதார நிறுவன தகவல்படி கண்புரை நோயுள்ள 12 முதல் 15 மில்லியன் நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண்பார்வையை இழக்கின்றனர். இதில் 20 சதவீதம் பேர் வரை சூரிய ஒளியால் ஏற்படும் புறஊதா கதிர்வீச்சுக்கு ஆட்படுவதால் இறக்கிறார்கள்.

இந்த புறஊதா கதிர்களால் கண்புரை நோய், இமை முனைத்திசு வளர்ச்சி, விழிப்புள்ளி சிதைவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து புறஊதா கதிர்வீச்சுக்கு ஆளானால், ஒரு அல்லது இரு கண்களிலும் பார்வைத்திறன் இழப்புக்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். குறைந்த நேரத்தில் அதிக தீவிரமான புறஊதா கதிர்கள் கண்களை தாக்கினால் போட்டோகேரடிடிஸ் எனப்படும் விழிப்பார்வை அழற்சிக்கு வழிவகுக்கலாம்.

எனவே, புறஊதா கதிர்வீச்சில் இருந்து கண்களை பாதுகாப்பது அவசியமாகும். புறஊதா கதிரிலிருந்து பாதுகாக்கும் திறனற்ற கருப்பு கண்ணாடிகள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. அதிகளவில் புறஊதா கதிர்கள் கண்களுக்குள் நுழையவும் அதிக சேதத்தை ஏற்படுத்தவும் இந்த வகை கண்ணாடிகள் அனுமதிக்கும். எனவே, 99 சதவீதத்துக்கும் அதிகமான அளவு புறஊதா கதிர்வீச்சை தடுக்கிற சன்கிளாஸ்களை தேர்வு செய்து அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

அதைப்போல சூரியனை நேரடியாக உற்றுப்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மேகமூட்டம் இருக்கும் பகல் நேரத்தில்கூட சூரிய கதிர்களால் கண்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். எனவே, வெளியே செல்லும்போது பாதுகாப்பான கண்ணாடிகளை அணிவது நல்லது. குறிப்பாக, இந்தியா போன்ற வெயில் அதிகமுள்ள நாடுகளில் இது மிகவும் அத்தியாவசியமாகும்.

நீண்டநேரமாக டிவி பார்ப்பது, கம்ப்யூட்டர் அல்லது செல்போன்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது போன்றவையும் கண் பிரச்சினை ஏற்படுவதற்கு வழிவகுக்கும். ஸ்மார்ட்போன்களிலில் இருந்து வெளிப்படுகிற நீலநிற கதிர்கள், கண்களில் நீண்டகால பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். அதே போல, தொடர்ந்து நீண்ட நேரம் இடைவெளியின்றி கணினித்திரைகளில் வேலை செய்வது, ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்றழைக்கப்படும் பாதிப்பை உண்டாக்கும்.

கண்களை பாதுகாக்க மிக அதிக பிரகாசமான வெளிச்சத்தில் அல்லது மிக மங்கலான வெளிச்சத்தில் கம்ப்யூட்டர்களில் பணியாற்றுவது, செல்போன்கள் பயன்படுத்துவது மற்றும் டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இவை கண்கள் மீது அளவுக்கதிகமான அழுத்தத்தை தூண்டுகின்றன. பயன்பாட்டுக்கு உகந்த வெளிச்சமுள்ள நிலையில் மட்டுமே இச்சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.

விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு செல்போன்களை குழந்தைகளும், இளவயதினரும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். ஏனெனில் இது அவர்களது பார்வைத்திறனை பாதிக்கக்கூடும். தங்களது செல்போன்களில் அதிக நேரம் செலவிடுகிற குழந்தைகள் மற்றும் இளவயதினர், உலர்ந்த கண்கள் பிரச்சினையின் அதிக அறிகுறிகளை கொண்டிருப்பதை ஒரு புதிய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. எனவே, கம்ப்யூட்டர், செல்போன், டி.வி.யில் நீண்ட நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.

கணினித்திரையின் மீது ஆன்டிகிளேர் ஸ்கிரீன் பொருத்தப்பட வேண்டும். கணினியில் பணியாற்றும்போது பிரதிபலிப்புக்கு எதிரான பூச்சு கொண்ட கண்ணாடிகளை அணிவது நல்லது. இருட்டான அறையில் அளவுக்கதிகமான வெளிச்சமுள்ள டிஸ்பிளே கண் அழுத்தத்தை ஏற்படுத்தும். இட சூழலுக்கேற்ப கணினி மற்றும் செல்போன் டிஸ்பிளேயின் ஒளி அளவானது, சரியாக அமைக்கப்பட வேண்டும்.

அடிக்கடி கண்களை சிமிட்டுவது, கண்களில் திரவப்பசை இருக்குமாறு செய்யும் மற்றும் கண் உலர்வை தடுக்கும். மேலும் கண் பயிற்சிக்கான 20-20-20 என்ற விதியை பின்பற்றுவது பலனளிக்கும். இது மிகவும் எளிதானது. 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளை 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 நொடிகள் என்ற காலஅளவுக்கு பார்க்க வேண்டும். இது, கண் தசைகளை தளர்வாக்கி அவற்றுக்கு ஓய்வளிக்கும்.

மொத்தத்தில், தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்களிலிருந்து முடிந்தவரை நமது கண்களை பாதுகாப்பது பார்வைத்திறன் பிரச்சினைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள உதவும்.

டாக்டர் திரிவேணி, கண்புரை நோய் அறுவை சிகிச்சை நிபுணர்